புதிதாக ஆட்களை நியமிப்பதா? ராமேசுவரம் கோவில் சுகாதார பணியாளர்கள் போராட்டம்


புதிதாக ஆட்களை நியமிப்பதா? ராமேசுவரம் கோவில் சுகாதார பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 20 Sept 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

சுகாதார பணியாளர்களாக புதிதாக ஆட்களை நியமித்ததை கண்டித்து ராமேசுவரம் கோவிலில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் ராமேசுவரம் கோவிலை சுத்தம் செய்யும் பணி, கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக டெண்டர் மூலம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த டெண்டரில் குறைந்த தொகை கேட்கும் தனியார் நிறுவனங்களுக்கு அரசின் விதிமுறைகளின்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிலை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் ரூ.6,601 வழங்காமல் ரூ.3500 மட்டுமே வழங்கி வருவதாக புகார்கள் எழுந்தது.

மேலும் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்காக மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகையையும் அவர்களது கணக்கில் செலுத்தவில்லையாம். இது தவிர கடந்த 1½ மாதத்திற்கும் மேலாக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு பணிக்கு வந்த சுகாதார பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி கோவில் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களாகவே கலைந்து சென்று பணிக்கு திரும்பினர்.

இதையடுத்து கோவில் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய காரணத்தால் சுகாதார பணியாளர்கள் யாரும் வேலைக்கு வரவேண்டாம் என கூறிய அதிகாரிகள், புதிதாக 15 பணியாளர்களை நியமித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுகாதார பணியாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சிவா, கருணாகரன், தே.மு.தி.க. நகர செயலாளர் முத்துக்காமாட்சி, இந்திய கம்யூனிஸ்டு சி.ஆர்.செந்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜாமணி, நாம் தமிழர் கட்சி நிர்வாகி இளங்கோ உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கோவில் அலுவலகம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுகாதார பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவும், மீண்டும் அவர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் கோவில் இணை ஆணையர் அறை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் தாசில்தார் அப்துல்ஜபார், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் செப்டம்பர் 19-ந்தேதி வரையிலும் தனியார் நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே இப்பணிக்கு டெண்டர் எடுத்திருந்த நிறுவனத்தின் பணிக்காலம் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டது. தற்போது வேறு ஒரு நிறுவனத்தினர் புதிதாக டெண்டர் எடுத்துள்ளனர். இவர்கள் வருகிற அக்டோபர் மாதம் முதல் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்படும் பணியாளர்களே தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று இணை ஆணையர் தெரிவித்தார்.

அதற்கு பணியாளர்கள் தரப்பில் இருந்து புதிதாக டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் பணியாளர்களை நியமிக்கும் வரையில் தாங்கள் சம்பளம் இல்லாமல் ஒரு சேவையாக கோவிலில் வேலை பார்க்கிறோம் என்று தெரிவித்தனர். இதனை இணை ஆணையரும் ஏற்றுக்கொண்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story