திருப்பூர் மாவட்ட கலெக்டர் திடீர் மாற்றம்; புதிய கலெக்டராக கே.விஜயகார்த்திகேயன் நியமனம்


திருப்பூர் மாவட்ட கலெக்டர் திடீர் மாற்றம்; புதிய கலெக்டராக கே.விஜயகார்த்திகேயன் நியமனம்
x
தினத்தந்தி 20 Sep 2019 11:00 PM GMT (Updated: 20 Sep 2019 6:44 PM GMT)

திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிசாமி திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கலெக்டராக கே.விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு நகர்ப்புற படிப்பு மைய இயக்குனராக இருந்த கே.விஜயகார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த ஆசியா மரியம் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் சப்-கலெக்டர் கே.மேகராஜ் நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக இருந்த கே.பாஸ்கரன் நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தர்மபுரி சப்-கலெக்டராக இருந்த சிவனருள் திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையாளராக இருந்த திவ்யதர்ஷினி ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற பெண்கள் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனராக இருந்த பிரவின் பி.நாயர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக இருந்த ஜி.கோவிந்தராஜ் கூட்டுறவு சங்க பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் சப்-கலெக்டராக இருந்த கிராந்தி குமார் பதி ஈரோடு மண்டல வணிகவரித்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்டவர்கள் உள்பட மொத்தம் 52 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 8-6-2017-ம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே.எஸ்.பழனிசாமி பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள கே.விஜயகார்த்திகேயன் ஏற்கனவே கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றியவர். டாக்டர், எழுத்தாளர், தன்னம்பிக்கை சிந்தனையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

Next Story