குன்னூரில் 2-வது சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா


குன்னூரில் 2-வது சீசனுக்கு தயாராகும் காட்டேரி பூங்கா
x
தினத்தந்தி 21 Sept 2019 3:30 AM IST (Updated: 21 Sept 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் உள்ள காட்டேரி பூங்கா 2-வது சீசனுக்கு தயாராகி வருகிறது.

குன்னூரில்,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. சுற்றுலா மாவட்டமான இங்கு ஆண்டுக்கு இரண்டு சீசன்கள் நிலவுகின்றன. முதலில் கோடை சீசன் ஏப்ரல, மே மாதங்களிலும், 2-வது சீசன் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் நிலவுகின்றன.

இந்த 2 சீசன்களின் போதும் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள பூங்காக்களில் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகின்றன. பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை காணவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்றன.

தற்போது ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் 2½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஊட்டிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்காவிற்கும் வந்து செல்கின்றனர். குன்னூர் காட்டேரி பூங்காவில் கடந்த மாதம் 2-வது சீசனுக்காக சுமார் 1 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.

தற்போது இவை செடிகளாக வளர்ந்து, மலர்கள் மலரும் தருவாயில் உள்ளன. காட்டேரி பூங்காவில் அக்டோபர் முதல் வாரத்தில் 2-வது சீசன் தொடங்குகிறது.

2-வது சீசனையொட்டி பூங்காவை தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பூங்காவில் உள்ள புல்வெளிகளை சமன் செய்தல், வர்ணம் பூசுதல், மலர் செடிகளை பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்செடிகளை நட்டுள்ளனர்.

இதுகுறித்து பூங்கா பணியாளர்கள் கூறுகையில், காட்டேரி பூங்காவில் 2-வது சீசனையொட்டி 1 லட்சம் மலர் செடிகள் நடப்பட்டு தினந்தோறும் தண்ணீர் ஊற்றி, களை எடுத்து பராமரிக்கபட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது செடிகள் அனைத்து பூக்கும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்து குலுங்கும். இது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். இவ்வாறு அவா் கூறினார்கள்.

Next Story