நம்பியூர் அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட 5-வது நீரேற்று நிலைய பணி


நம்பியூர் அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட 5-வது நீரேற்று நிலைய பணி
x
தினத்தந்தி 21 Sept 2019 4:30 AM IST (Updated: 21 Sept 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே அத்திக்கடவு-அவினாசி திட்ட 5-வது நீரேற்று நிலைய பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள வரபாளையத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 5-வது நீரேற்று நிலைய பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் இ.எம்.ஆர்.ராஜா (அந்தியூர்), ஈஸ்வரன் (பவானிசாகர்), நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் ரூ.1,652 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. நம்பியூர் அருகே வரப்பாளையத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 5-வது நீரேற்று நிலைய பணிகள் அமைந்துள்ளது. அதற்காக 8 பேர் நிலம் வழங்கியுள்ளனர் அவர்களுக்கு அரசின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் 50 சதவீத நிதி அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ரூ.1,652 கோடி முழு தொகையையும் மாநில அரசே ஏற்றுக்கொண்டு பணிகளை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 971 சிறு குட்டைகள், 41 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 32 பொதுப்பணித்துறை குளங்கள் நிரப்பப்பட உள்ளன. காலிங்கராயன் அணையின் கீழ் பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு நீரேற்று நிலையங்கள் மூலமாக குளம், குட்டைகள் நிரப்பப்படும். இதன் மூலம் 24 ஆயிரத்து 478 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகள் இந்த தண்ணீரை சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனமாக பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும்.

இந்தத் திட்டமானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. பலர் சமூக வலைதளங்களில் இந்த திட்டம் செயல்பட போவதில்லை எனக் கூறி வருகின்றனர். அவை அனைத்தையும் முறியடித்து இத்திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி காட்டும்.

அந்தியூர் தொகுதியில் 6 இடங்களில் ரூ.67 கோடி செலவில் புதிய அணைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. மேலும் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் ரூ.60 கோடியில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணைக்கு மேல் பகுதியில் முக்காணி என்ற இடத்தில் கேரளாவிற்கு தண்ணீர் பிரிந்து செல்கிறது. இந்த தண்ணீரை குகை வழியாக பவானிசாகர் அணைக்கு கொண்டு வந்து ஆண்டு முழுவதும் அணை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்ட உள்ளது. காய்ந்து வறண்டு கிடக்கும் இந்த பூமியை பொன் விளையும் பூமியாக இந்த அரசு மாற்றிக் காட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அத்திக்கடவு-அவினாசி போராட்டக்குழுவினர், அரசு வக்கீல் கங்காதரன், சேரன் சரவணன், ஈஸ்வரமூர்த்தி, சந்திரசேகர், ராமசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், வி.சி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story