மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2019 10:00 PM GMT (Updated: 20 Sep 2019 8:29 PM GMT)

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருச்சி, 

தமிழக கோர்ட்டுகளில் நீதிபதிகள் நியமனத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை தவணை முறையில் அளிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், அதனை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 20-ந் தேதி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் நேற்று திருச்சியில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். பின்னர் திருச்சி வக்கீல் சங்க தலைவர் ரமே‌‌ஷ் நடராஜன் தலைமையில் அவர்கள் கோர்ட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு- புதுச்சேரி ‘பார்’ கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் விக்கிரமாதித்தன், செயலாளர் வெங்கட், துணை தலைவர்கள் செந்தில்நாதன், பிரபு மற்றும் மூத்த வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் தமிழக கோர்ட்டுகளில் தமிழ் தெரிந்தவர்களையே நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். வக்கீல்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் திருச்சி கோர்ட்டில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story