டி.டி.வி. தினகரனை தனிமைப்படுத்தினால் சிதைந்து கிடக்கிற அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது - அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் பரபரப்பு பேட்டி
டி.டி.வி. தினகரனை தனிமைப்படுத்தினால் சிதைந்து கிடக்கிற அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது என்று அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் கூறினார்.
திருச்சி,
அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வி. திவாகரன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன், அவைத்தலைவர் சுந்தர் ராஜன், பொருளாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் முடிந்ததும் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடும். அதற்காக கட்சியின் அமைப்பினை வலுப்படுத்துவதற்காக தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா, அல்லது கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதா? என்பதை தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அவரது தலைமையை ஏற்பீர்களா? என்கிற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். எனது சகோதரி என்ற அடிப்படையில் அவரை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. டி.டி.வி. தினகரனின் எதேச்சதிகார போக்கினால் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் விலகி வேறு இடங்களுக்கு செல்கிறார்கள். சசிகலா சிறைக்கு சென்றபோது 133 எம்.எல்.ஏ.க்கள், அமைச்சரவை, துணை பொதுச்செயலாளர் பதவியுடன் அவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால் இப்போது நிலைமை என்ன? அவரை நம்பி வந்த 18 எம்.எல்.ஏ.க்களை கூட தினகரன் கண்டு கொள்ளவில்லை.
டி.டி.வி. தினகரனை ஓரம் கட்ட எனக்கு (திவாகரன்) எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் உண்மை கிடையாது. எனக்கு பணம் கொடுக்க யாரும் பிறக்கவில்லை. டி.டி.வி. தினகரனை தனிமைப்படுத்தினால் சிதைந்து கிடக்கிற அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது.
அ.தி.மு.க. என்பது பலம் வாய்ந்த மிகப்பெரிய இயக்கம். அதன் தீர்மானங்கள் வலுவாக இருக்கவேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் எல்லா திட்டங்களையும் ஆதரிக்கக்கூடாது. நல்ல திட்டங்களை ஆதரிக்கலாம். தமிழக மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. சுயபலம், சுயமரியாதை இன்றி செயல்படக்கூடாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆட்சி அவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அமைச்சர்கள் இஷ்டத்திற்கு பேசுவது ஒரு நாடகம் ஆகும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமானால் சோர்ந்து போய் இருக்கிற தொண்டர்களுக்கு நிறைய மருந்து கொடுக்கவேண்டும். தற்போது உள்ள பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணவேண்டும். அ.தி.மு.க. வாக்கு வங்கி எங்கும் போய்விடவில்லை.
தமிழகத்தில் இனி நடிகர்களின் ஆதிக்கம் எடுபடாது. மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்கள் தான் வெற்றிபெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே உணவு மண்டல திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக அனைத்து மாநில அரசுகளின் ஒப்புதலை பெறவேண்டும், சேலம் விவசாயிகளின் சம்மதத்துடன் எட்டு வழி சாலை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்த தனி அதிகாரம் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டு குழுவை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், ரெயில்வே, அஞ்சல் துறை, விமான போக்குவரத்து துறை போன்ற மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும், 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொது தேர்வு என்ற கொள்கை முடிவில் மாற்றங்கள் தேவை என்பதை மாநில அரசு வலியுறுத்த வேண்டும், விவசாயிகளின் நிலங்களை அவர்களின் சம்மதம் இன்றி அபகரிக்கின்ற செயல்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தையும், மேக் இன் இந்தியா திட்டத்தையும் வரவேற்கிற நேரத்தில் இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளமொழி என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நேரு அளித்த வாக்குறுதியை மோடி அரசு மாற்றக்கூடாது என கேட்டுக்கொள்வது, ஒரே ரேஷன் திட்டத்தை வரவேற்பது என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை திவாகரன் மேடையில் வாசித்தார்.
கூட்டத்தில் திருச்சி மண்டல அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் பக்ருதீன் (மாநகர்), முருகேசன் (புறநகர்) மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமிர்தலிங்கம், மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராஜாவெங்கடேசன் உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story