தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் உயர்ந்த இலக்கை அடையலாம்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு பேச்சு
தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் உயர்ந்த இலக்கை அடையலாம் என்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு பேசினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42-வது பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் வரவேற்று, கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 437 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நன்றி, விசுவாசம் என்ற நற்பண்புகள் இருந்தால், நல்லொழுக்கம் என்ற உயர்பண்பு தானாக தோன்றிவிடும். நல்லொழுக்கம் நிறைந்த மனிதர்களையே அனைவரும் விரும்புகின்றனர். எனவே, நல்லொழுக்கத்தை தரும் நன்றி உணர்வை அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும். எனவேதான் திருவள்ளுவர் நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்று எழுதி உள்ளார்.
எனவே நன்றியும், நல்லொழுக்கமும் நெருங்கிய தொடர்பு உடையவை. இவை ஒன்றினுள் ஒன்றாக, வெளிப்புற கண்களாக உள்ளன. இவற்றுக்கு அன்பு என்ற அகக்கண்ணே அடிப்படையாக உள்ளது. அன்பே பிரதானம் என்பதை அனைவரும் அறிவர். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்பது திருவள்ளுவர் விடுக்கும் வினா. அன்பினால் ஆகாதது உண்டோ? என்னும் கருத்தின் அடிப்படையிலேயே, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் வரச்செய்த காந்தியடிகளின் அகிம்சை நெறியினை உலகுக்கு அறிய தருகிறார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை.
மாற்றாரிடத்தும் அன்பு காட்டும் பண்பே அனைவரும் போற்றும் புகழைப் பெற்று தருகிறது. புகழை அடைவதே அனைவரின் லட்சியமாக இருக்க வேண்டும். ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் வாக்கினை புறம்தள்ள முடியாது. எனவேதான் அவர் அன்புடைமை, புகழ் என்ற அதிகாரங்களை படைத்து, இந்த சமுதாயம் அன்பான புகழ்பெற்ற சமுதாயமாக மாறுவதற்கு வழிவகை கூறுகிறார்.
ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு மனிதர்கள் வரை அன்பையே விதைத்தவர் வள்ளலார் ராமலிங்க சுவாமி. அதனால்தான் அவர் அணையாத அடுப்பை உருவாக்கி பசிப்பிணி போக்கினார். இந்த சமூகத்திற்காகவும், நாட்டுக்காகவும் தங்களை அர்ப்பணித்தவர்கள் வரலாறாக மாறியுள்ளனர்.
எனவே, மாணவ-மாணவிகள் எந்த வேலையையும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும். மேலும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், கடினமாக உழைத்தால் உயர்ந்த இலக்கை அடைந்து வெற்றி பெறுவது நிச்சயம். மாணவ-மாணவிகள் கற்ற கல்வியை கடைபிடித்து, அதன்படி செயல்பட வேண்டும். தடம் மாறுபவர்களால் தடம் பதிக்க முடியாது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளை கண்டறிந்து, அவற்றை கைவிட வேண்டும்.
மாணவ-மாணவிகள் தகவல் தொடர்பு சாதனங்களின் ஆற்றலை அறிந்து, அவற்றை பயன்படுத்தி சாதனை புரிய வேண்டும். மாறாக பிறருக்கு வேதனை தரும் நிலையை உருவாக்கிட கூடாது. பகவத் கீதையில் கூறியதைப் போன்று எந்த பலனையும் எதிர்பாராமல் நமது கடமையை செய்ய வேண்டும். பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் சுயநலமின்றி, பொதுநலத்துடன் நாட்டுக்காகவும், மொழிக்காவும், குடும்ப உறவுகளுக்காகவும் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். அதுவே நாம் பெற்ற கல்விக்கும், பட்டத்துக்கும் பெருமை சேர்க்கும்.
இவ்வாறு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு பேசினார்.
தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமையில், பட்டமளிப்பு விழா உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story