காட்டுமன்னார்கோவில் அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயம் பறிமுதல் - 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட எரி சாராயத்தை போலீசார் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அடுத்த காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் ஒரு வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக சிதம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டுக்குள் போலீசார் சந்தேகத்தின் பேரில் சென்று சோதனை செய்தனர். அதில் அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 32 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வீட்டில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சின்னப்பராஜ்(வயது 35), காட்டுமன்னார்கோவில் அடுத்த கருணாகரநல்லூரை சேர்ந்த மணிவேல் மகன் சதிஷ்குமார்(28) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் ஒரு காரில் பல்வேறு பகுதிகளுக்கு எரிசாராயம் கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 1,120 லிட்டர் எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். வீட்டுக்குள் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story