கடலூரில், வீச்சரிவாளை காட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
கடலூரில் வீச்சரிவாளை காட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலை கங்கையம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் வீச்சரிவாள், கத்தியுடன் நின்று கொண்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டிக்கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதை பார்த்த 2 பேரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனை ஆபாசமாக திட்டி, கத்தி, வீச்சரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். உடன் 2 பேரையும், போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுக்குப்பம் காசிம்கான் மகன் பாருக்கான் (வயது 40), ராஜம்நகரில் வசித்து வரும் கிருஷ்ணன் குட்டி மகன் ரஞ்சித்குமார் (42) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கத்தி, 2 வீச்சரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான பாருக்கான், தமிழக வாழ்வுரிமை கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story