சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது


சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சூலூர், 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை சூலூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில் அவர்கள் சூலூரை அடுத்த அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 29), திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைசேர்ந்த மணிகண்டன் (28),மதுரையை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரிய வந்தது.மேலும், இவர்கள் 3 பேரும் சூலூர், காடம்பாடி, காங்கேயம்பாளையம், கலங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள பெருமாள் கோவிலில் திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சூலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story