தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேர் கைது
தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவைகளை மூடக்கோரி திருச்சி-புதுக்கோட்டை சாலை தொண்டைமான்நல்லூரில் உள்ள சுங்கச்சாவடி முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதனையடுத்து நேற்று காலையில் அங்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் செரோன்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் நியாஸ் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 40 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் அவர்கள், இழுத்துமூடு, இழுத்து மூடு சுங்கச்சாவடியை இழுத்து மூடு என்று கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அதில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து நாடு செழிக்கவில்லை, பூமி விளையவில்லை உனக்கு எதுக்கு கொடுக்க வேண்டும் வரி என கட்டபொம்மனை போல வீரவசனம் பேசினார். இதைத்தொடர்ந்து போலீசார் சுங்கசாவடியை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 40 பேரையும், கைது செய்து வேனில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று தொண்டைமான்நல்லூர் சுங்கசாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாநில இளை ஞரணி தலைவர் செரோன் குமார் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக இழுத்து மூடவேண்டும் இல்லையென்றால் எங்களது கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
Related Tags :
Next Story