கோத்தகிரியில், ஊட்டச்சத்து உணவு கண்காட்சி - கலெக்டர் பார்வையிட்டார்


கோத்தகிரியில், ஊட்டச்சத்து உணவு கண்காட்சி - கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 21 Sept 2019 4:15 AM IST (Updated: 21 Sept 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு வட்டார அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்தல் மற்றும் வளர்ச்சியினை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி ஊழியர்கள் சுகாதாரத்துறையுடன் இணைந்து வீடுகளை பார்வையிடுதல் மூலம் ரத்த சோகை, குறைந்த எடை மற்றும் வளர்ச்சி குறைபாட்டை கண்டறிதல், பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு ஊட்டுதல், குழந்தைகளுக்கு கைகழுவும் பழக்கத்தினை கற்றுக்கொடுத்தல் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள ஒவ்வொருவரும் முழு ஈடுபாடுடன் செயல்பட்டால் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க முடியும். முக்கியமாக குடிபெயர்ந்து வரும் பயனாளிகள் குறித்த விவரங்களையும் பதிவு செய்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் சுகாதார ஆலோசனைகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் வழங்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தில் நமது மாவட்டத்தில் எந்த ஒரு கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் மற்றும் 6 வயது வரையுள்ள குழந்தைகள் ஒருவர் கூட விடுபடக்கூடாது. அனைத்து பகுதிகளிலும் உள்ள எடை குறைவான குழந்தைகள் மற்றும் மிதமான எடை குறைவான குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் வழங்க மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் வரும்போது, அவர்களுக்கு தேவையான வசதிகளை தேயிலை தோட்ட நிர்வாகிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஊட்டச்சத்து மாதத்திற்கான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக கோத்தகிரி பஸ் நிலையம் எதிரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக ஊட்டச்சத்து உணவு கண்காட்சி மற்றும் எடை எடுக்கும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கோத்தகிரி பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடைக்கு வண்ணம் தீட்டும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கோத்தகிரி பேரூராட்சிக்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் ஆடத்தொரை முதல் அளக்கரை வரை முடிக்கப்பட்ட சிமெண்ட் சாலையினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பொற்கொடி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோல்டிசாராள், நந்தகுமார், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story