வக்கீல் வீட்டில் 150 பவுன் நகைகள் கொள்ளை


வக்கீல் வீட்டில் 150 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சைதாப்பேட்டையில் வக்கீல் வீட்டில் 150 பவுன் தங்க நகைகளையும், ரூ.2½ லட்சத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. வக்கீலான இவர் மனைவி மற்றும் மகன், மகளோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இந்தநிலையில், இவரது வீட்டின் பீரோ லாக்கரில் இருந்த 150 பவுன் தங்கநகைகள் மற்றும் 2½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியமூர்த்தி சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மற்றும் போலீசார், வக்கீல் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த பீரோவின் லாக்கர் உடைக்கப்படாமல் இருந்ததும், பீரோவின் சாவி சமையல் அறையில் உள்ள ஒரு கைப்பையில் இருந்ததும் தெரியவந்தது.

எதிர்வீட்டில் வசிக்கும் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக சத்தியமூர்த்தி போலீசாரிடம் அளித்த புகார் மனுவில் கூறி உள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story