மாவட்ட செய்திகள்

திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு + "||" + Rowdy killed in Tiruvallikeni

திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு

திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு
சென்னை திருவல்லிக்கேணியில், வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டாங்குப்பம் கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அறிவழகன் (வயது 24). கூலித்தொழில் செய்து வந்த அறிவழகன் ஒரு கொலை வழக்கில் சிக்கினார். அதன்பிறகு அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மாட்டாங்குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் அறிவழகன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த வினோத், பாலாஜி ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாள், கத்தியால் அறிவழகனின் தலையில் சரமாரியாக வெட்டினார்கள்.

மிகவும் கொடூரமான முறையில் மூளை சிதறும் வகையில் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

அப்போது வீட்டிற்குள் வந்த அறிவழகனின் பெற்றோர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் சரவணன், அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அறிவழகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது அறிவழகன், தேன்மொழியின் ஜாக்கெட்டை கிழித்து மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தேன்மொழியின் மகன்களான வினோத், பாலாஜி ஆகியோர் அறிவழகனிடம் தகராறு செய்தனர். இந்த முன்விரோதம் காரணமாகவே வினோத்தும், பாலாஜியும் சேர்ந்து ரவுடி அறிவழகனை வீடு புகுந்து பயங்கரமாக வெட்டி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்த வினோத், பாலாஜி ஆகிய 2 பேரையும் பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் அதை போலீசார் மறுத்துவிட்டனர். இந்த கொலை காரணமாக திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.