மாமல்லபுரம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 2 பேர் கைது


மாமல்லபுரம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2019 11:30 PM GMT (Updated: 20 Sep 2019 10:06 PM GMT)

மாமல்லபுரம் அருகே சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் 2 நாள் அரசு முறை பயணமாக அடுத்த மாதம் மாமல்லபுரம் வருகின்றனர். இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கின்றனர்.

இந்தநிலையில் இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகள் மற்றும் சுற்றுப்புற மீனவர் பகுதிகளில் கடல் வழியாக ஊடுருவி யாராவது முறைகேடாக தங்கியுள்ளனரா? என போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாமல்லபுரத்தை அடுத்த வெண்புருஷம் மீனவர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

நாகமுத்து என்ற மீனவர் வீட்டில் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டை சேர்ந்த ஷிபானியா (வயது 36) பாஸ்போர்ட்டு, விசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக 6 மாதம் தங்கியிருப்பதை கண்டு பிடித்தனர். மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் பாஸ்போர்ட்டு சட்டம், வெளிநாட்டினர் விதி மீறல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் எதற்காக இங்கு தங்கினார்? என்ன வேலை செய்கிறார்? என்ற கோணத்தில் மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீஸ் சோதனையில் மாமல்லபுரம் அருகே கோவளத்தை அடுத்த செம்மஞ்சேரி படவட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த ராஜநாயகம் (40) பாஸ்போர்ட்டு, விசா போன்ற ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அங்கு தங்கி இருப்பது தெரியவந்தது.

அதற்கு முன்னர் நீலாங்கரையில் தங்கியிருந்ததாகவும் வார்தா புயலின் போது தன்னுடைய பாஸ்போர்ட்டு, விசா போன்றவை தொலைந்து விட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த அவரை கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்ட்டு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் அவர்களின் அடையாள அட்டையை காண்பித்த பிறகே சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மாமல்லபுரம் வரும் சுற்றுலா வாகனங்களின் எண்களும் நகரின் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு வரும் பார்வையாளர் நேரத்தை 5 மணிக்குள் முடித்து தொல்லியல் துறையினர் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பாகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story