சேலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் பாதுகாப்பு படையினர், போலீசார் தீவிர சோதனை
சேலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்,
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு நேற்று மதியம் மனிதன் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
சேலம், ஜோலார்பேட்டை, ஈரோடு, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன். கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், பழனி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்களில் குண்டு வைக்கப்படும். இதனை மெத்தனமாக எடுத்து கொள்ள வேண்டாம். 100-க்கும் மேற்பட்ட உயிர்சேதம் ஏற்படும். வாகனத்தில் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டு தகர்க்கப்படும். இந்த கடிதத்தில் என்னுடைய முகவரி தெரிவிக்க முடியாது. நான் வறுமையில் வாடுவதால் எனக்கு மத்திய அரசு பணி வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைப் படித்து அதிர்ச்சி அடைந்த கோட்ட மேலாளர் சுப்பாராவ், சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார் ஆகியோர் இணைந்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. ரெயில் நிலையத்திற்குள் சந்தேகிக்கப்படும் படியாக யாராவது சுற்றி திரிகிறார்களா? எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ரெயில் நிலையம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தண்டவாள பகுதி, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மோப்ப நாய்கள் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சேலம் வழியாக வந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story