சூளகிரி அருகே, பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்
சூளகிரி அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு, நேற்று காலை 7.30 மணிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். டிரைவராக எருமாம்பட்டியை சேர்ந்த அபிராம் என்பவரும், கண்டக்டராக வேலம்பட்டியை சேர்ந்த ரவிகுமார் என்பவரும் பணியில் இருந்தனர்.
சூளகிரி அருகே உள்ள சின்னாறு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பியது. அப்போது அந்த வழியாக வந்த லாரி மீது பஸ் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. அந்த நேரம் அப்பகுதியில் சாலையோரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த சின்னாறு பகுதியை சேர்ந்த சுதா (வயது 25) என்பவர் மீது பஸ் மோதியது. இதையடுத்து அந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுதா மற்றும் பஸ்சில் பயணம் செய்த மத்தூரை சேர்ந்த நவாப்ஜான், பெரியார் நகரை சேர்ந்த பஷீர், சிந்தகம்பள்ளியை சேர்ந்த சக்திவேல், வேலம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன், நாயக்கனூரை சேர்ந்த லட்சுமணன், காவாப்பட்டியை சேர்ந்த கார்த்திக், ஓசூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மெகர்நிகர் உள்பட மொத்தம் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story