பெரம்பலூரில் துணிகரம்: என்.எல்.சி. என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெரம்பலூரில் துணிகரம்: என்.எல்.சி. என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Sept 2019 4:15 AM IST (Updated: 21 Sept 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் என்.எல்.சி. என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் 5-வது வார்டுக்கு உட்பட்ட ரோவர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 30). இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் நெய்வேலியிலேயே வசித்து வருகிறார். சுரேஷ்குமாரின் தந்தை தங்கராசு ஏற்கனவே இறந்து விட்டதால் தாய் கிருஷ்ணகுமாரி மட்டும் பெரம்பலூர் ரோவர் நகரில் உள்ள மாடி வீட்டில் தரைதளத்தில் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் மேலுள்ள 2 தளங்களும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாரி கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு நெய்வேலியில் உள்ள மகன் சுரேஷ்குமார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுரேஷ்குமாரின் சொந்த வீட்டில் உள்ள படுக்கையறையின் ஜன்னல் கதவின் தாழ்ப்பாள் உடைந்து திறந்து கிடந்தது. மேலும் ஜன்னல் கிரில் கம்பி பிரேம் உடைந்து, அதனருகே தனியாக கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து சுரேஷ்குமாருக்கு உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சுரேஷ்குமார் தனது தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் குடும்பத்தினருடன் புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்தார். அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று படுக்கையறையை பார்த்தார். அப்போது கட்டிலில் துணிமணிகள் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. படுக்கையறையில் சுரேஷ்குமாரின் தாய் கிருஷ்ணகுமாரி திருடர்களுக்கு பயந்து அலமாரிகள் மற்றும் தலையணை, படுக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த மொத்தம் 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் படுக்கையறையின் ஜன்னல் கதவின் தாழ்ப்பாளை உடைத்து திறந்து, கிரில் கம்பி பிரேமை கழற்றி, அறைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை நடந்த வீட்டின் படுக்கையறையில் இருந்த பீரோவை மர்மநபர்களால் உடைக்க முடியாததால், அதிலிருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் தப்பியது.

மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பெரம்பலூர் நகர் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரம்பலூர் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் இரும்பு கம்பிகளை திருடி சென்றது, அந்தப்பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனாலும் அந்த மர்மநபர்களை பிடிப்பதற்குள் கொள்ளை சம்பவம் அதனருகே அரங்கேறியிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பெரம்பலூரில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பெரம்பலூர் நகர் பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரியும் நபர்களையும் பிடித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story