திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2019 4:15 AM IST (Updated: 21 Sept 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மண் வளத்தை பாதுகாத்திடவும், ரசாயன உரங்களால் ஏற்படும் மண்வள பாதிப்பை தடுத்திடவும் விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்ணின் நலத்தை மீண்டும் வளமாக்கி, நஞ்சில்லாத உணவை வழங்க இயலும். எனவே திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்களான நெற்பயிருக்கான அசோஸ்பைரில்லம், சிறுதானியங்கள், சூரியகாந்தி, எள், பருத்தி, கரும்பு, காய்கறி பயிர்கள், தென்னை மற்றும் வாழை போன்ற நெல் அல்லாத இதர பயிர்களுக்கான அசோஸ்பைரில்லம், ரைசோபியம்(பயறு), ரைசோபியம்(கடலை), அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போபாக்டீரியா ஆகியன இம்மையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உயிர் உரங்கள் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கின்றன. மண்ணில் பயிர் எடுத்து கொள்ள முடியாத நிலையில் உள்ள மணிச்சத்தை பயிருக்கு எளிதில் கிடைக்க செய்கின்றன. பயிர் வளர்ச்சி ஊக்கியான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் ‘பி’ ஆகியவற்றை உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளரும். நோய் எதிர்ப்பு திறனை மண்ணில் உண்டாக்குகின்றன. வறட்சி தாங்கும் திறனை பயிர்களுக்கு கொடுக்கின்றன. ரசாயன உரங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சேமிக்கப்படுவதால் உரச்செலவு குறைகிறது. மாசற்ற சுற்றுப்புற சூழ்நிலையினை ஏற்படுத்துகிறது. மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. மகசூல் 10 சத வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது.

மேலும் திரவ உயிர் உரங்கள் 100 மில்லி லிட்டர், 250 மில்லி லிட்டர், 500 மில்லி லிட்டர், 1000 மில்லி லிட்டர் அளவுகள் பிரத்யேகமான கொள்கலன்களில் வினியோகம் செய்யப்படுகின்றன. திரவ உயிர் உரங்களில் ஒரு மில்லி லிட்டருக்கு பன்னூறு மடங்கு பாக்டீரியாக்கள் கூட்டமைப்பு உருவாக்கும் அலகுகளை கொண்டிருக்கும். திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 முதல் 24 மாதங்கள் ஆகும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக பாக்டீரியாவை பிரித்தெடுக்கும் அமைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது.

உயிர் உரங்களை, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து பயன்படுத்தக்கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சனக்கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்புதான் கடைசியாக உயிர் உரங்கள் விதைநேர்த்தி செய்ய வேண்டும். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ரசாயன உரங்களைக் குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி நுண்ணீர் பாசன திட்டம், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டங்களை இணைத்து செயல்படுத்தி அதிக மகசூல் பெற்று நிகர லாபத்தை அதிகரித்திடலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story