கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் உதவி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் வேலூரில் உதவி கலெக்டர் அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
காட்பாடி தாலுகா இளையநல்லூர் மதுரா குப்பிரெட்டிதாங்கல் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்காக கடந்த 2013-ம் ஆண்டு தனியார் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டது. அப்போது 20-க்கும் மேற்பட்டவர்களுடைய 60 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அப்போது ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.1,250 இழப்பீடாக வழங்கப்பட்டது.
ஆனால் அருகில் உள்ள நிலங்கள் ஒரு சென்ட் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாகிறது, எனவே இழப்பீடு தொகை கூடுதலாக வழங்கவேண்டும் என்று நிலம் கொடுத்தவர்கள் வேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து சென்டுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடாக, 3 மாதங்களுக்குள் வழங்க கடந்த 2016-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி இழப்பீடு வழங்கவில்லை. இதனால் மீண்டும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இழப்பீடு வழங்காததால் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் நேற்று கோர்ட்டு அமீனா மற்றும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலகத்தில் இருந்து பொருட்களை அவர்கள் ஜப்தி செய்ய முயன்றனர்.
அப்போது உதவி கலெக்டர் இல்லாததால் மற்ற அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் அங்கு வந்து, ஜப்தி செய்ய வந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இழப்பீடு வழங்க 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story