கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன் தாக்க முயன்றனர் துப்பாக்கியால் சுட்டு மர்மநபர்களை விரட்டிய கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பெங்களூரு அருகே பரபரப்பு சம்பவம்


கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன் தாக்க முயன்றனர் துப்பாக்கியால் சுட்டு மர்மநபர்களை விரட்டிய கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பெங்களூரு அருகே பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 21 Sept 2019 4:17 AM IST (Updated: 21 Sept 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே வீட்டு முன்பு நின்ற கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன், தன்னை தாக்க முயன்ற மர்ம நபர்களை துப்பாக்கியால் சுட்டு கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் விரட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சிடிஒசகோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர், கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். தற்போது அவர் சிடிஒசகோட்டை கிராம பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார். இந்த நிலையில், நள்ளிரவில் ஸ்ரீராம் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், அவரது வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்களின் கண்ணாடிகளை ஆயுதங்களால் தாக்கி உடைத்தார்கள். இதில், 2 கார்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.

இதனால் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து ஸ்ரீராம், அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அங்கு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் 10-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கார்களின் கண்ணாடிகளை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து ஸ்ரீராம் அதிர்ச்சி அடைந்தார்.

துப்பாக்கியால் சுட்டு...

பின்னர் திடீரென்று ஸ்ரீராம், அவரது உறவினர்கள் ரகு, பிரகாஷ் ஆகிய 3 பேரையும் மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்க முயன்றனர். உடனே சுதாரித்து கொண்ட ஸ்ரீராம் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மர்மநபர்களை சுட்டு விடுவதாக மிரட்டினார். ஆனாலும் மர்மநபர்கள், அவரை ஆயுதங்களால் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டு மர்மநபர்களை ஸ்ரீராம் எச்சரித்தார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் ஆனேக்கல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஸ்ரீராம் மற்றும் ரவி இடையே பிரச்சினை இருந்து வந்ததும், ரவியின் கூட்டாளிகள் தான் ஸ்ரீராமின் கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன், அவரையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஸ்ரீராமிடம் உள்ள துப்பாக்கிக்கு, அவர் லைசென்சு வாங்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆனேக்கல் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story