போராட்டத்தில் ஈடுபட்ட சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம்; வேலைநிறுத்தம் தொடர்வதால் கிராம மக்கள் அவதி


போராட்டத்தில் ஈடுபட்ட சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம்; வேலைநிறுத்தம் தொடர்வதால் கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Sept 2019 4:30 AM IST (Updated: 21 Sept 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் வேலைநிறுத்தம் தொடர்வதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் கடந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் தொகையும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் நிலுவை சம்பளம், போனஸ் தொகை ஆகியவற்றை வழங்கக்கோரியும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், காண்டிராக்ட் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந்தேதி முதல் சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்துகொண்டுள்ளதால் புதுவை அரசு பஸ்சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான கிராம பகுதிகளுக்கு அரசு பஸ்கள் செல்லாததால் அங்குள்ள பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். ஊழியர்களுடன் அமைச்சர் ஷாஜகான் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் தோல்வியிலேயே முடிவடைந்தது.

இந்தநிலையில் ஊழியர்களுக்கான நிலுவை சம்பளம், போனஸ்தொகை என ரூ.5 கோடியே 80 லட்சம் அவரவர் வங்கிக்கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது. எனவே ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், காண்டிராக்ட் ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நேற்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் நேற்று 4-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குமார் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 11 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் மேலாண் இயக்குனர் குமார், ‘ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் சம்பளம் வழங்கப்படும், ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த ஊழியர்கள் தினக்கூலி ஊழியர்களாக ஒரு மாதத்தில் மாற்றப்படுவார்கள்’ என்று கூறினார். மேலும் இதனை ஒரு சுற்றறிக்கையாக அவர்களிடம் கொடுத்தார்.

ஆனால் தொழிற்சங்க பிரநிதிகள் இதனை அமைச்சர் கையெழுத்திட்டு ஆணையாக வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அமைச்சர் தான் அதற்கான ஆணையை வழங்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story