கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என பகல் கனவு காணும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மந்திரி ஈசுவரப்பா பேட்டி


கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என பகல் கனவு காணும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மந்திரி ஈசுவரப்பா பேட்டி
x
தினத்தந்தி 21 Sept 2019 4:30 AM IST (Updated: 21 Sept 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பகல் கனவு காண்கின்றன என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பகல் கனவு காண்கிறது

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது தவறானது. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. மீதமுள்ள ஆட்சி காலத்தை பா.ஜனதா நிறைவு செய்யும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவோம். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என பகல் கனவு காண்கிறது.

ஒருவேளை சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தாலும், பா.ஜனதா தனிப்பெரும்பான்மையை பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. கோடி மடத்தின் மடாதிபதி, சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறார். அவர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

நியாயம் கிடைத்தே தீரும்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், சட்டவிரோதமாக அவர்களை தகுதி நீக்கம் செய்தார். அவர்களுக்கு உரிய நியாயம் கிடைத்தே தீரும். அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை சரிசெய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.

வேறு சில காரணங்களால் சுப்ரீம் கோர்ட்டில் அவர்களின் மனு மீது விசாரணை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரிக்கும் கர்நாடக அரசின் முடிவை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அந்த மாவட்டம் வளர்ச்சி பெறும். முன்பு பா.ஜனதா ஆட்சி நடைபெற்றபோது, பல்லாரியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு அந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் யாரும் அக்கறை செலுத்தவில்லை.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Next Story