இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை; காரைக்கால் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை; காரைக்கால் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Sept 2019 5:00 AM IST (Updated: 21 Sept 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு குரும்பகரம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). மதகடி அருகில் உள்ள பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 6 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணிடம் மகேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்துகொள்வதாக அவர் ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பிய அந்த பெண் கடந்த 6.11.2016 அன்று வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தான் வேலை செய்யும் பட்டறைக்கு அழைத்துச்சென்று மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த பெண்ணை அவரது வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு காரைக்கால் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மகேந்திரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story