வெள்ள சேதம் தொடர்பாக பிரதமர், எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் சார்பில் 10 கேள்விகள்


வெள்ள சேதம் தொடர்பாக பிரதமர், எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் சார்பில் 10 கேள்விகள்
x
தினத்தந்தி 21 Sept 2019 4:32 AM IST (Updated: 21 Sept 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

வெள்ள சேதம் தொடர்பாக பிரதமர், முதல்-மந்திரிக்கு காங்கிரஸ் சார்பில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் தொடர்பாக பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் 10 கேள்விகளை கேட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகளை பார்க்க வராதது ஏன்?, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வெள்ள பாதிப்புகளை பார்த்ததன் பயன் என்ன?, இந்த கடும் வெள்ள சேதங்களை தேசிய பேரிடர் என்று அறிவிக்காதது ஏன்?, இவ்வளவு சேதம் ஏற்பட்டது குறித்து தெரிவித்தும் இடைக்கால நிதி உதவியாக ஒதுக்குமாறு எடியூரப்பா கேட்ட ரூ.5,000 கோடி இடைக்கால நிவாரண நிதியைகூட ஒதுக்காதது ஏன்?.

வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்காமல் கர்நாடகத்தை அவமதிப்பது ஏன்?, நிவாரண நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்காதது ஏன்?. வெள்ள சேத நிவாரண நிதியை பெற பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவை மாநில அரசு அழைத்து செல்லாதது ஏன்?.

இடம் மாற்றியது ஏன்?

கர்நாடக பா.ஜனதாவை சேர்ந்த 25 எம்.பி.க்கள் தங்களின் கடமையை மறந்து மாயமானது ஏன்? கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை பெலகாவியில் இருந்து பெங்களூருவுக்கு இடம் மாற்றியது ஏன்?, பாதிக்கப்பட்டவர்கள் அங்கு வந்து போராட்டம் நடத்துவார்கள் என்பதுதான் காரணம்? வெள்ளத்தால் ரூ.35 ஆயிரத்து 160 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறிய மாநில அரசு ரூ.1,500 கோடி மட்டும் ஒதுக்கியது நியாயம்தானா?. இந்த 10 கேள்விகளுக்கும் பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Next Story