பணியின் போது ஒழுங்கீனம்: அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை


பணியின் போது ஒழுங்கீனம்: அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Sept 2019 5:30 AM IST (Updated: 21 Sept 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

பணியின் போது அரசு ஊழியர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.8,425 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் தொகை முழுவதையும் இந்த ஆண்டு செலவு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே அமைச்சர்கள் தங்கள் இலாகாவின் கீழ் உள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுப் பணித்துறை அமைச்சர் நமச் சிவாயம் நேற்று பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பொதுப்பணித்துறை, நகர மற்றும் கிராம அமைப்பு துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக புதுவை நகர பகுதிகளில் குப்பைகளை அகற்றுவது, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வாய்க்கால்கள், ஏரி மற்றும் குளங்களை தூர்வார மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளிடம், பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளை முழுமையாக செலவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.

அப்போது அதிகாரிகள் அமைச்சர் நமச்சிவாயத்திடம், ‘ஊழியர்கள் சிலர் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றனர். அதிகாரிகளின் உத்தரவை மதிப்பது இல்லை’ என்று புகார் தெரிவித்தனர். உடனே அமைச்சர் நமச்சிவாயம், “அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது பணியிடைநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Next Story