பா.ஜனதா- சிவசேனா இடையே இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு உத்தவ் தாக்கரே தகவல்


பா.ஜனதா- சிவசேனா இடையே இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு உத்தவ் தாக்கரே தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2019 5:08 AM IST (Updated: 21 Sept 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் முதன் முறையாக கூட்டணி முறிந்தது. இந்த கூட்டணி முறிவை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் புதுப்பித்து கொண்டன.

இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணியாக சந்திக்க முடிவு செய்தன. இதற்கான தொகுதி பங்கீடும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே, அதாவது கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையே செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்படி இரு கட்சிகளும் சரிசம தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்ததாக கூறப்பட்டது.

சந்தேகத்தை கிளப்பிய மந்திரி

ஆனால் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவு ரத்து ஆகியவற்றால் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதால், அந்த கட்சி சிவசேனாவுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க முன்வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் சிவசேனாவுக்கு 126 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 162 தொகுதிகளும் பங்கீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட பிரச்சினைகளை முன்வைத்து பா.ஜனதா, சிவசேனா கூட்டணி சந்தேகம் தான் என்று கூறி சிவசேனா மந்திரி திவாகர் ராவ்தே சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உத்தவ் தாக்கரே தகவல்

இந்த சூழ்நிலையில் சிவசேனா மூத்த தலைவர்களின் கூட்டம் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் தேர்தல் கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின் போதே சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டுக்கான ’பார்முலா’ முடிவு செய்யப்பட்டது. இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாயிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் பதிலளித்து கூறுகையில், “சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி ஏற்படுவது உறுதி. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பை வருகிறார். அன்றோ அல்லது அதற்கு முன்பே தொகுதி பங்கீடு ஏற்படும்” என்றார்.

Next Story