விழுப்புரத்தில் அரசு கல்வியியல் கல்லூரி தொடங்கப்படும்: அமைச்சர் அன்பழகன் தகவல்


விழுப்புரத்தில் அரசு கல்வியியல் கல்லூரி தொடங்கப்படும்: அமைச்சர் அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 22 Sept 2019 3:30 AM IST (Updated: 22 Sept 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

2020-21-ம் கல்வியாண்டில் விழுப்புரத்தில் அரசு கல்வியியல் கல்லூரி தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.2¾ கோடியில் கூடுதலாக 12 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராமலட்சுமி வரவேற்றார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

1968-ம் ஆண்டு விழுப்புரத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரியில் 5,438 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 48.6 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். 2020-21-ம் கல்வியாண்டில் விழுப்புரத்தில் அரசு கல்வியியல் கல்லூரி தொடங்கப்படும். இதில் பி.ஏ.வுடன் இணைந்த பி.எட்., பி.எஸ்சி.யுடன் இணைந்த பி.எட். 4 வருட படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பெற தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. எனவே இந்த அரசுக்கு மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஆவின் தலைவர் பேட்டை முருகன், விழுப்புரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், முத்தமிழ்செல்வன், கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் கதிர்.தண்டபாணி, துணைத்தலைவர் பாஸ்கர், நகர கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டு சேகர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், இயக்குனர் வக்கீல் செந்தில், மின்னல்சவுக் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரியின் தமிழ் துறைத்தலைவர் மாதவி நன்றி கூறினார்.

Next Story