ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை


ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2019 10:15 PM GMT (Updated: 21 Sep 2019 8:40 PM GMT)

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் காரணமாக தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் 2 கடைகளுக்கு பூட்டு போடப்பட்டன.

நல்லூர்,

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடையை மீறி விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகர் நல அலுவலர் பூபதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் நேற்று காலை திருப்பூர் பெருமாள் கோவில் அருகில் உள்ள அரிசி கடை வீதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாபுலால் என்பவர் நடத்தி வரும் பிளாஸ்டிக் கடை மற்றும் அருகில் உள்ள மற்றொரு பிளாஸ்டிக் கடையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாக விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

அதன் காரணமாக அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் அபராதம் செலுத்தாததால் அந்த கடைகளை இழுத்து மூடி பூட்டு போட்டு நோட்டீஸ் ஓட்டினார்கள். பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை 2 சரக்கு வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்று நல்லூர் மண்டல அலுவலகத்தில் வைத்தனர்.

ஆய்வில் மண்டல சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.

Next Story