திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு அடி-உதை; பொதுமக்கள் ஆத்திரம்


திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு அடி-உதை; பொதுமக்கள் ஆத்திரம்
x
தினத்தந்தி 22 Sept 2019 3:15 AM IST (Updated: 22 Sept 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் கோல்டன்நகரை சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று மதியம் அவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள். வீட்டின் அருகே தானே விளையாடுகிறாள் என்பதால் பெற்றோரும் அவளை பற்றி கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல பகுதிகளில் அவளை தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள புதர் பகுதியில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் பெற்றோர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த சிறுமி அங்கு அழுது கொண்டிருந்தாள். உடனே அவளை மீட்ட பெற்றோர் இது குறித்து அவளிடம் கேட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளியான கந்தசாமி (வயது 34) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அழுது கொண்டே அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இது குறித்து கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தொழிலாளி கந்தசாமியை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர்.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம் கந்தசாமியை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கந்தசாமி குடிபோதையில் இருந்ததாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story