அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி மாணவன் சாவு


அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி மாணவன் சாவு
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே சமீபத்தில் பெய்த மழையால் கண்மாயில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டத்தில் நீண்ட காலமாக மழை பொய்த்து வறட்சி நிலவி வந்தது. சில தினங்களுக்கு முன்புதான் மழை பெய்தது. இந்த மழையால் கண்மாயில் தேங்கி இருந்த தண்ணீரில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் இறந்து போனான். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அருப்புக்கோட்டை அருகேயுள்ள குறிஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அழகர். கட்டிட தொழிலாளி. இவரது மகன் சரவணன்(வயது10). இவன் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சரவணன் அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுடன் வெளியே சென்றுள்ளான்.

அனைவரும் அந்த பகுதியில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார்கள். குடிமராமத்து பணி நடந்த அந்த கண்மாயில் மண் எடுத்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதைப்பார்த்ததும் அதில் இறங்கி குளிக்க ஆயத்தமானார்கள். சரவணன் தண்ணீரில் இறங்கியதும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் அவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதைக்கண்ட சிறுவர்கள் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்கள். அவர்கள் ஓடி வந்து நீரில் மூழ்கி இறந்த சரவணன் உடலை மீட்டனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சரவணன் உடல் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story