பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு


பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
x
தினத்தந்தி 21 Sep 2019 11:45 PM GMT (Updated: 21 Sep 2019 9:23 PM GMT)

பிளஸ்-1 மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

பள்ளியில் அவரது பெற்றோர் கேட்டும் வழங்கவில்லை. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு அந்த மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தூண்டுதலின்பேரில் மாணவர்கள் சிலர் ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி, பள்ளிக்கு செல்ல மறுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பள்ளி கல்வித்துறைக்கும், போலீஸ் கமிஷனருக்கும் மாணவியின் தாய் புகார் ஒன்றை அளித்தார்.

அதன்பேரில் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story