ரூ.1 கோடி மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் வழக்கில் 5 பேர் கைது
ரூ.1 கோடி மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
ஆரணி நெசல் கிராமம் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஒரு பள்ளியின் எதிரே உள்ள காலி நிலத்தில் கடந்த 17-ந் தேதி இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு டேங்கர் லாரி, 2 கார்கள், 2 வேன்கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களும் நின்று கொண்டிருந்தன. மேலும் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலரும் நின்று கொண்டிருந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், செய்யாறு கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த அனைவரும் தப்பியோடி விட்டனர்.
அங்கிருந்த டேங்கர் லாரி மற்றும் வேன்களை போலீசார் சோதனை நடத்தினர். டேங்கர் லாரியில் 9 ஆயிரம் லிட்டர் எரிசாராயமும், வேன்களில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 332 வெள்ளை நிற கேன்களில் மொத்தம் 11 ஆயிரத்து 620 லிட்டர் எரிசாராயமும், 135 காலி கேன்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் நேரடி மேற்பார்வையில் கலால் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தப்பியோடியவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் எண்களை வைத்து சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்று காலை ஆரணி அருகே உள்ள எட்டிவாடி ஜங்சன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் ஒரு காரில் வருவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காரை போலீசார் சுற்றி வளைத்து அதில் இருந்து செய்யாறு புளியரம்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார், அன்மருதை காலனியை சேர்ந்த முருகன், காஞ்சீபுரத்தை சேர்ந்த தினகரன், செய்யாறை சேர்ந்த நக்கீரன், ஆரணி சிறுமூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கலையூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story