ரூ.2½ லட்சம் கையாடல் புகார்: தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை முயற்சி - அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


ரூ.2½ லட்சம் கையாடல் புகார்: தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை முயற்சி - அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரூ.2½ லட்சம் கையாடல் புகாரில் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 31). இவர், சேலம் அங்கம்மாள் காலனியில் தங்கியிருந்து சின்னேரிவயக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இங்கு வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்த பணத்தில் ரூ.2½ லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கண்டுபிடித்தார். இதுபற்றி அவர், நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, மேலாளர் செந்தில்குமார் ரூ.2½ லட்சம் வரை கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்தியதில், அவரும் பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பணத்தை நேற்று கொடுப்பதாக நிறுவனத்தின் உரிமையாளரிடம் செந்தில்குமார் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே செந்தில்குமார் வந்தார். பின்னர் அவர் விஷ மாத்திரைகளை கடையில் வாங்கி சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு சென்று படுத்திருந்தார். அப்போது, அங்கிருந்த ஊழியர்களிடம் தான் விஷ மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story