கிருஷ்ணகிரியில் மாணவர் விடுதி, ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மாணவர் விடுதிகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர், அரசு கலைக்கல்லூரி பிற்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி, ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி, பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, டான்சி தொழிற்பேட்டை வளாகம் ஆகிய இடங்களில் தூய்மை பணிகள் மற்றும் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மாணவர் விடுதிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு, குடிநீர் வசதி, சமையல் செய்யும் இடங்கள், மாணவர்களின் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள உணவு பட்டியலில் உள்ளவாறு உணவு சமைத்து வழங்க வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதோடு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வாரம் ஒருமுறை சுத்தம் செய்திட வேண்டும் என விடுதி காப்பாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு, குடியிருப்பு வளாகத்தில் தூய்மை பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நகராட்சி மற்றும் வீட்டுவசதி வாரிய துறைகள் இணைந்து அதிக பணியாளர்களை கொண்டு இந்த தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்ற அவர் பொருட்கள் இருப்பு சரியான அளவில் உள்ளதா? என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா? என்பதையும் மின்னணு எடை கருவியை கொண்டு, கோதுமையை எடை போட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் டான்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்ட அவர், கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாயில் உள்ள அடைப்பை சீர்செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உதவி பொறியாளர் செல்வி, உதவியாளர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story