பணம் கொடுத்தால் சான்றிதழ் பெறும் நிலை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் - துரைமுருகன் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி


பணம் கொடுத்தால் சான்றிதழ் பெறும் நிலை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் - துரைமுருகன் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 22 Sept 2019 4:15 AM IST (Updated: 22 Sept 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்று துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறினார்.

காட்பாடி, 

காட்பாடி காந்திநகரில் வேலூர் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மாணவிகளுக்கான தங்கும் விடுதி பணிகளை முழுமையாக முடிந்து விரைவில் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாணவிகள் விடுதியை துரைமுருகன் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டக்கல்லூரி மாணவ,மாணவிகளின் போராட்டம் நியாயமானது தான். இந்த பிரச்சினை குறித்து முன்பே கல்லூரி முதல்வரும், மாணவர்களும் தெரிவித்து இருந்தால் சரி செய்திருப்பேன். சில பிரச்சினைகள் எனது கவனத்துக்கு வரவில்லை.

மாணவிகள் விடுதி கட்டுவதற்கு கடந்த 2017-ம் ஆண்டு அனுமதி பெற்றும் இதுவரை பணிகள் முழுமையடையவில்லை. கட்டிடம் கட்டி 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை மின்வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. அதனால் ஒப்பந்ததாரருக்கு பொதுப்பணித் துறையினர் நோட்டீஸ் வழங்க வேண்டும்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு எனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் அதிகமாக உள்ளது. பணம் கொடுத்தால் சான்றிதழ் பெறலாம் என்ற நிலை காணப்படுகிறது. எனவே கல்லூரி நிர்வாகம் திருந்த வேண்டும். கவர்னர் நியமனம் செய்தார் என்ற மமதையில் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளார்.

ஆண்டவனே நியமித்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊழல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறேன். விரைவில் பல்கலைக்கழகத்தின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story