இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நெசவு தொழிலாளி சிகிச்சைக்கு கலெக்டர் உதவி
இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நெசவு தொழிலாளி சிகிச்சைக்கு கலெக்டர் உதவி செய்து, மேல்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
திருவண்ணாமலை,
களம்பூர் பேரூராட்சியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 52), நெசவு தொழிலாளி. இவரது மனைவி லதா (45). இவர்களது மகள் யுகேஸ்வரி (26) திருமணமானவர். மகன் கோகுல் (24). இவர்கள் வீட்டில் பட்டு நெசவுத் தொழில் செய்து மிக ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
கோகுல் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிறு வயதில் இருந்து பெற்றோர்களின் கவனிப்பில் வளர்ந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேல்முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேல்முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவரை உடனடியாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மேல்சிகிச்சை பெற அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை நடத்தியதில் இதய நோய், நீரிழிவு நோய், இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு ஆகிய நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. வேல்முருகனுக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு கூடுதலாக ரூ.2½ லட்சம் தேவைப்பட்டதால் மனைவி லதா என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு லதா கலெக்டரை நேரில் சந்தித்து தனது கணவர் நிலை குறித்து எடுத்துரைத்து கண்ணீர் மல்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி அனுப்பி வைத்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று வேல்முருகன், லதா, கோகுல் ஆகியோர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் வேல்முருகனை சென்னை அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் மேல்சிகிச்சை மேற்கொள்வதற்கு கலெக்டர் வழியனுப்பி வைத்தார். மேலும் லதாவிடம் கலெக்டர் ரூ.10 ஆயிரம் செலவிற்கு வழங்கினார்.
சென்னையில் ஒரு வாரம் சிகிச்சை நடைபெறும் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக கோகுல் மாற்றுத்திறனாளிகள் பாதுகாக்கும் இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கலெக்டரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) அனந்த்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story