சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி உறுதி ‘நான் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன்’ தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்


சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி உறுதி ‘நான் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன்’ தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்
x
தினத்தந்தி 22 Sept 2019 4:38 AM IST (Updated: 22 Sept 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடும் என்றும், தான் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ள ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மும்பை வருகிறார். அப்போது இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்-மந்தரி தேவேந்திர பட்னாவிசிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

சாதகமான முடிவு

கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அமையுமா?

முதல்-மந்திரி பதில்:- சிவசேனாவுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவது என்பது நிச்சயம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் சாதகமான முடிவுகள் எட்டப்படும். அதற்கு முன்பு வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம். தொகுதி பங்கீடு குறித்த அனைத்து விவரங்களும் முறையாக செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

கேள்வி:- ‘சாம்னா’வில் தொடர்ந்து பா.ஜனதா அரசுக்கு எதிரான கருத்துகள் இடம்பெறுகிறதே?

பதில்:- நான் ‘சாம்னா’வை படிக்கவில்லை. தனது மந்திரி சபை எடுத்த அனைத்து முடிவுகளும் சிவசேனா மந்திரிகளின் ஆதரவுடன் ஒருமனதாக எடுக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு சிவசேனா மந்திரியும் எந்த முடிவுகளையும் பற்றி இரண்டாவது கருத்து கொண்டிருக்கவில்லை. எனவே, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.

என்ன சந்தேகம்?

கேள்வி:- மற்றொரு முறை உங்களுக்கு முதல்-மந்திரியாக பதவி கிடைக்குமா?

பதில்:- அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?.

கேள்வி:- யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுமா?

பதில்: ஆதித்ய தாக்கரேவை துணை முதல்-மந்திரியாக்கும் முடிவை சிவசேனா எடுக்கும். ஆதித்ய தாக்கரே தீவிர அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அதை நான் சாதகமாக எடுத்துக்கொள்கிறேன். அவர் ஒரு நாள் சிவசேனாவை வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Next Story