காஞ்சீபுரம் அருகே படைவீரனின் உருவம் பொறித்த பழங்கால நடுக்கல்


காஞ்சீபுரம் அருகே படைவீரனின் உருவம் பொறித்த பழங்கால நடுக்கல்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:30 AM IST (Updated: 22 Sept 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே படைவீரனின் உருவம் பொறித்த பழங்கால நடுக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகம் தமிழ் துறையில் பணியாற்றி வரும் அமுல்ராஜ், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் வரலாற்று சின்னங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தார். அப்போது ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கிபி 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கல் ஒன்று இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழக வரலாற்றில் கோவிலில் தொண்டு செய்வதற்காக பல்வேறு ஊர்களை இறையிலி நிலங்களாக பிற்கால சோழர்கள் வழங்கியுள்ளனர் இறையிலி நிலங்கள் என்பவை வரி விலக்கு அளிக்கப்பட்ட பகுதியாகும்.

கோவிந்தவாடி அகரம் கிராமம் சோழர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஊராகும்.

இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒரு நடுக்கல் காணப்படுகிறது. வழிபாட்டில் உள்ள இந்த நடுக்கல் கிபி 12-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதில் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வீரன் இடது கையில் வில்லை தாங்கியுள்ளான். தலையில் நேராக நீண்ட கொண்டையும் முகத்தில் பெரிய மீசையும் உள்ளது. வலது தோள்பட்டையின் பின்புறம் அம்புகளை வைக்கும் அம்புக்கூடு காணப்படுகிறது வலது கையில் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையுடன் கால்கள் இரண்டும் இடதுபுறம் நோக்கி திரும்பிய நிலையில் காணப்படுகிறது.

இந்த அடையாளங்கள் யாவும் வீரனுக்கு உரியவையாகும். போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரன் ஒருவனுக்காக இந்த நடுக்கல் அமைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story