சிக்னல் கோளாறு: திருச்சிக்கு தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகள் கடும் அவதி


சிக்னல் கோளாறு: திருச்சிக்கு தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 23 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

சிக்னல் கோளாறு காரணமாக திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

திருச்சி,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் நோக்கியும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கியும் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. சிக்னல் கோளாறு ஓரளவு சரி செய்த பின் ஒவ்வொரு ரெயிலாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக சென்னை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் திருச்சிக்கு 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்து சென்றன.

பயணிகள் அவதி

இதேபோல சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சிக்கு நேற்று அதிகாலை 4.45 மணிக்கு வர வேண்டியது 4 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக காலை 8.55 மணிக்கு வந்து புறப்பட்டது. மேலும் சென்னை-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு வரவேண்டியது 4 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக காலை 9.35 மணிக்கு வந்தது. மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் திருச்சி வந்த பின் திருச்சியில் இருந்து சென்னைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலாக காலை 10 மணிக்கு இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தாமதமானதால் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. காலை 10 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 11.45 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டது. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். திண்டிவனத்தில் நேற்று பகலில் தான் சிக்னல் கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டன. இதனால் நேற்று பகலிலும் சென்னையில் இருந்து திருச்சி வந்த ரெயில்கள் சில மணி நேரம் தாமதமாக வந்தன.

Next Story