தமிழகத்துக்கு புதிதாக 825 மின்சார பஸ்கள் வாங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


தமிழகத்துக்கு புதிதாக 825 மின்சார பஸ்கள் வாங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2019 11:15 PM GMT (Updated: 22 Sep 2019 7:14 PM GMT)

தமிழகத்துக்கு புதிதாக 825 மின்சார பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சேலம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 603 பேருக்கு பணப்பயன்கள் வழங்கும் விழா சேலம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு அரசு போக்கு வரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் சேனாதிபதி வரவேற்றார்.

விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சரோஜா, மாவட்ட கலெக்டர் ராமன், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் என மொத்தம் 603 பேருக்கு ரூ.121 கோடியே 92 லட்சம் மதிப்பிலான ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழிலாளர்களுக்கு சலுகை

தமிழக போக்குவரத்துக் கழக வரலாற்றில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 6,283 பேருக்கு பணப்பயன்கள் வழங்குவதற்காக ரூ.1093 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். அதாவது, தி.மு.க. ஆட்சியை காட்டிலும் அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய துறை ஆகும். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற பஸ் வசதி கிடையாது. ஒரு கிராமத்தில் ஆயிரம் பேர் வசித்தால் அங்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது இருந்து வந்தது. ஆனால் 500 பேர் இருந்தாலே குக்கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பிறகு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் புதிய பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர, 520 மின்சார பஸ்களும் விரைவில் இயக்கப்பட உள்ளது.

825 மின்சார பஸ்கள்

மேலும், இன்னும் ஒரு வருடத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழகத்துக்கு 825 மின்சார பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக்கழக துறையில் புதிய யுக்திகள் கையாளப்பட்டு வருகிறது. ஏ.சி. மற்றும் படுக்கை வசதி, கழிவறை வசதிகள் கூடிய பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பஸ்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போக்குவரத்துக்கழகம் மட்டுமின்றி உயர்கல்வித்துறை, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழக அரசு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Next Story