துறையூர் அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்


துறையூர் அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:30 AM IST (Updated: 23 Sept 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார். விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துறையூர்,

துறையூரை அடுத்த காளிப்பட்டி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சமீபத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்த பின்னர் சாலையில் ஏற்கனவே இருந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இன்னும் வேகத்தடை அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று சிங்களாந்தபுரம் தெற்கியூரில் இருந்து மொபட்டில் வந்த கூலி தொழிலாளியான சேவுகன்(வயது 41), காளிப்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து வந்த கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேவுகன், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சாலை மறியல்

இதையறிந்த பொதுமக்கள் விபத்து நடைபெற்ற இடத்தில் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் துறையூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் துறையூர்-திருச்சி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story