விசாரணை கைதி சாவு: சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் சரண் - சிறையில் அடைக்கப்பட்டார்


விசாரணை கைதி சாவு: சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் சரண் - சிறையில் அடைக்கப்பட்டார்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:30 AM IST (Updated: 23 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

விசாரணை கைதி இறந்த வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரை மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக பாகூர் போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் ஜெயமூர்த்தி அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக செத்தார்.

ஜெயமூர்த்தியின் மரணம் தொடர்பாக நீதிபதி சரண்யா விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அவரது அறிக்கையின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீதும், சிறை சூப்பிரண்டு பாஸ்கரன், சிறைத்துறை டாக்டர் வெங்கட்ட ரமண நாயக் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயமூர்த்தி ஆதிதிராவிட வகுப்பினை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் காலாப்பட்டு சிறை சூப்பிரண்டு பாஸ்கரன், டாக்டர் வெங்கட்ட ரமண நாயக் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் புதுவை நீதிமன்றத்தில் சரணடைந்து, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்தநிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி சுபா அன்புமணி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story