மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி உடலில் நாட்டுவெடிகளை சுற்றி, தீக்குளிக்க முயன்ற ஊழியர்
நெய்வேலி அருகே மனைவியை சேர்த்து வைக்கக்கோரி உடலில் நாட்டு வெடிகளை சுற்றி கொண்டு, பெட்ரோல் ஊற்றி ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் நெய்வேலி 25-வது வட்டத்தை சேர்ந்த ஜெபமேரி என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ஜெபமேரி கணவரை பிரிந்து நெய்வேலியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் ஜெபமேரி, விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு கடலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரக்கோரியுள்ளார். ஆனால் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது உடலில் நாட்டு வெடிகளை சுற்றிக்கொண்டதோடு, உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். அந்த சமயத்தில் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பாலசந்திரன் என்பவர் அங்கு வந்தார். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் சங்கர், ராஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், சாதுர்யமாக செயல்பட்டு மணிகண்டனை அங்கிருந்து அழைத்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியா ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story