கூடலூர்- ஓவேலி சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்


கூடலூர்- ஓவேலி சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Sept 2019 3:45 AM IST (Updated: 23 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்- ஓவேலி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்,

கூடலூரில் இருந்து ஓவேலிக்கு சாலை செல்கிறது. இச்சாலையோரம் நகராட்சி அலுவலகம், வ.உ.சி. நகர், அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் சோதனைச்சாவடி, ராக்லேண்ட் தெரு, கெவிப்பாரா உள்பட பல பகுதிகள் உள்ளன. மாவட்ட கல்வி அலுவலகம், அரசு மாணவ- மாணவிகள் விடுதிகள், தனியார் மகளிர் பள்ளிக்கூடமும் உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் இச்சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதேபோல் ஓவேலிக்கு செல்லும் பஸ்கள், வாகனங்கள் அனைத்தும் இச்சாலையில் இயக்கப்படுகிறது. இதனால் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாக விளங்குகிறது. இதனால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நீண்ட காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில் சாலையோரம் புதர்கள் நிறைந்து மாணவர்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது. தொடர்ந்து வி‌‌ஷ பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறையினர் அரசு மேல்நிலைப்பள்ளி, சோதனைச்சாவடி பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு சாலையின் இருபுறமும் மண்ணை தோண்டி ஆழப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து சிமெண்டு, ஜல்லி கலவை கொண்டு பள்ளத்தை நிரப்பி வருகின்றனர்.

இதனிடையே ராக்லேண்ட் தெரு பகுதியில் சாலையோரம் மழைநீர் கரைபுரண்டு ஓடி பள்ளமான இடங்களில் எந்தவித பணிகளும் நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ளவில்லை. இதனால் இரவில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியுடன் கூறினர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ராக்லேண்ட் தெரு பகுதியில் வாகனங்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் சாலையை அகலப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story