அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை தேவை - மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
மாவட்டத்தில் அனுமதி இல்லாமலும் விதிமுறைகளை மீறியும் மணல் அள்ளுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்படுவதால் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பேரில், மதுரை ஐகோர்ட்டு, அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தி உள்ளது.
இதேபோன்று சமீபத்தில் மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி சவடு மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு விதிமுறைகளை மீறி சவடு மண் அள்ளுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.
குறைதீர்க்கும் நாளின் போதும் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் பலர் விதிமுறைகளை மீறி சவடு மண் அள்ளுவதால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் மனு கொடுத்துள்ளனர். சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போதும் மம்சாபுரம் மற்றும் பாவாலி பகுதியில் கண்மாய்களில் விதிகளை மீறி சவடு மண் அள்ளுவதால் கண்மாய்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறினர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் சவடு மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் கூறும் நிலை உள்ளது. இதேபோன்று அனுமதி இல்லாமல் மணல் அள்ளும் நடைமுறை பல இடங்களில் உள்ளது. போலீசார் அவ்வப்போது ஆற்றுப்படுகைகளில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து மணல் அள்ளுவது நீடித்து தான் வருகிறது.
மதுரை ஐகோர்ட்டு பலமுறை அறிவுறுத்தியும் அனுமதி இல்லமல் மணல் அள்ளும் நடைமுறையும், விதிமுறைகளை மீறி சவடு மண் அள்ளும் செயல்பாடும் அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதை தடுக்க வருவாய்த்துறையினரும் எங்களோடு சேர்ந்து ஒத்துழைத்தால்தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
சமீபத்தில் வெம்பக்கோட்டை அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளும்போது மணல் சரிந்து தந்தை, மகன் பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் அப்பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதை தடுக்க வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையே உள்ளது.
எனவே மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியபடி மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சவடு மண் அள்ளுவோர் மீதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தாலுகாவிலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.
Related Tags :
Next Story