பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேரு தான் காரணம் - மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேரு தான் காரணம் - மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Sept 2019 5:23 AM IST (Updated: 23 Sept 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக காரணம் என மத்திய மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

மும்பை, 

மராட்டிய சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பா.ஜனதா கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கட்சிக்காக பிரசாரம் செய்தார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

நான் பா.ஜனதா தொண்டர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை அகற்றியதுடன் நமது பணி முடிந்துவிடவில்லை. நமது பணி தற்போது தான் தொடங்குகிறது. தேசியவாதம் மற்றும் முன்னேற்றத்தின் அத்தியாயத்தில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே நமது இலக்காகும்.

காஷ்மீரின் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகளை நீக்கிய விவாதத்துடன் மராட்டிய தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் பார்க்கிறது, ஆனால் நாங்கள் அதை அப்படி பார்க்கவில்லை.

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு திடீரென பாகிஸ்தானுடன் தவறான நேரத்தில் போர் நிறுத்தம் அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது. இது நேரு செய்த மிகப்பெரிய தவறாகும். காஷ்மீர் பிரச்சினையை நேருவுக்கு பதிலாக சர்தார் வல்லபாய் படேல் கையாண்டிருக்க வேண்டும்.

மேலும் இந்த பிரச்சினை ஐ.நா. வரை போக நேரு காரணமாக அமைந்துவிட்டார்.

1950-ல் சர்தார் வல்லபாய் படேல் இறந்த பிறகு, ஷேக் அப்துல்லாவுடன் டெல்லி ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதுவே 370-வது பிரிவின் அடித்தளமாக அமைந்தது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த மன்மோகன் சிங் மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகிய இருவரும் பிரதமர்கள் ஆனார்கள். எல்.கே.அத்வானி துணை பிரதமர் ஆனார். ஆனால் வேறு மாநிலங்களில் இருந்து காஷ்மீர் சென்றவர்களுக்கு 370-வது பிரிவு நீக்கப்படும் வரை ஒருபோதும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. இன்று, இந்த மக்கள் வாக்களிக்க முடியும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சர்ஜிகல் ஸ்ட்ரைக், புலவாமா விமான தாக்குதல் உள்ளிட்டவற்றிற்கு ஆதாரம் கேட்கிறார். ராகுல் காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரசாரத்திற்கு வரும்போது, 370- வது பிரிவு ரத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்று அவர்களிடம் கேளுங்கள்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் எல்லையில் ஒரு குண்டு சத்தம் கூட கேட்கவில்லை. வரும் நாட்களில் அங்கு அமைதியின்மை ஒருபோதும் ஏற்படாது. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படும். காஷ்மீரில் ஊழலில் ஈடுபட்டவர்கள் இப்போது அங்கு குளிரான பகுதியில் இருந்தபோதிலும் வெப்பத்தை உணர்கிறார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் 1990-ம் ஆண்டில் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்ததற்கான பின்னணி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்த நாட்டின் கிரீடமான காஷ்மீரை விரைவில் பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிப்போம் என நாங்கள் அவர்களுக்கு உறுதி அளிக்கிறோம்.

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிந்ததும் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்-மந்திரி ஆவார்.

இவ்வாறு அமித்ஷா பேசினார். மத்திய அரசின் நிதி மக்களுக்கு கிடைத்திருந்தால்

‘காஷ்மீரின் வீடுகள் தங்க கூரைகளாக மாறி இருக்கும்’
மும்பையில் நேற்று நடந்த மராட்டிய சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் உருவானது முதல் இதுவரை மத்திய அரசு அந்த மாநிலத்திற்காக ரூ.2.27 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. அது மக்களிடம் முறையாக சென்றிருந்தால், அவர்களின் வீடுகளில் தங்கத்தால் செய்யப்பட்ட கூரைகள் இருந்திருக்கும்.

370-வது பிரிவு காஷ்மீரில் ஊழல் தடுப்பு பிரிவை அமைக்காமல் இருக்க உதவியது. இதனால் முந்தைய அரசுகள் ஊழல் தடுப்பு பிரிவை அமைக்கவில்லை. அதன் காரணமாக அந்த அரசாங்கங்கள் பரவலான ஊழலில் ஈடுபட்டன. மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. 370-வது பிரிவு காஷ்மீரின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக பயன்படுத்தபடவில்லை. மாறாக அரசியல் தலைவர்கள் ஊழலை மறைக்கவே பயன்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story