பாதாள சாக்கடை பணியை முறையாக செய்யக்கோரி சத்தியமங்கலத்தில் அனைத்து கட்சியினர் சாலை மறியல்; நகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு


பாதாள சாக்கடை பணியை முறையாக செய்யக்கோரி சத்தியமங்கலத்தில் அனைத்து கட்சியினர் சாலை மறியல்; நகராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 23 Sept 2019 6:59 PM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை பணியை முறையாக செய்யக்கோரி சத்தியமங்கலத்தில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சத்தியமங்கலத்தின் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் குழிகள் சரியாக மூடப்படாததால் வீதிகள் மற்றும் ரோடுகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் கடை வீதியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் முதல் சின்னவீதி வழியாக கோட்டுவீராம்பாளையம் பஸ் நிறுத்தம் வரை குழி தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டன. பின்னர் குழி மூடப்பட்டது. ஆனால் குழி சரியாக மூடப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சின்னவீதி வழியாக வந்த லாரி ஒன்றின் முன் சக்கரம் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கியது. பின்னர் அந்த லாரி பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்றும் சின்னவீதியில் தோண்டப்பட்ட குழிக்குள் சிக்கியது. இதுபோன்ற பல வாகனங்கள் குழிக்குள் சிக்கின. மேலும் அங்கிருந்த குடிநீர் குழாயும் உடைந்தது. இதனால் பல வீடுகளுக்கு குடிநீர் செல்லவில்லை.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் வியாபாரிகள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு மணிக்கூண்டு அருகே வந்தனர். பின்னர் பாதாள சாக்கடை பணியை முறையாக நிறைவேற்றக்கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் அத்தாணி செல்லும் ரோட்டில் உள்ள புதுபாலத்தில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைத்து கட்சியியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மறியலை கைவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் கோ‌ஷமிட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட அரசு துறையினரை அழைத்து அனைத்து கட்சி சார்பில் கூட்டம் நடத்தி பாதாள சாக்கடை திட்டத்தை தொடரலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த அனைத்து கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story