தாளவாடி அருகே விடிய விடிய கொட்டி தீர்த்த மழை தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிப்பு


தாளவாடி அருகே விடிய விடிய கொட்டி தீர்த்த மழை தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 7:23 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயில் நன்றாக அடித்து வந்தது. மேலும் கடும் வறட்சி காரணமாக விவசாய பணிகள் சரியாக நடக்கவில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது.

இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள தலமலை, கோடிபுரம், காளிதிம்பம், பெஜலட்டி, ஆசனூர், அரேபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை 5 மணி வரை நீடித்தது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் தலமலை பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தாளவாடியில் இருந்து தலமலைக்கு செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் நேற்று காலை கரைபுரண்டு ஓடியது. இதன்காரணமாக காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனம், பஸ், பள்ளி வேன் போன்ற எந்தவித வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அதுமட்டுமின்றி பள்ளிக்கூட மாணவ– மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். 9.30 மணிக்கு வெள்ளம் வடிந்ததும் வாகன போக்குவரத்து தொடங்கியது.

Next Story