அனுமதியின்றி செயல்படும் பட்டாசு குடோன்கள்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


அனுமதியின்றி செயல்படும் பட்டாசு குடோன்கள்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 9:05 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு குடோன்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி,

சிவகாசி பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் லாரிகள் மூலம் தான் வெளிமாநிலங்களுக்கும், வெளியூர்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைக்க வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல பட்டாசு நிறுவனங்கள் அனைத்தும் தனித்தனியாக குடோன் வைத்து அதில் பட்டாசுகளை பாதுகாப்பாக வைத்து தேவைப்படும் போது பட்டாசுகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். பாதுகாப்பு வசதியுடன் அமைக்கப்படும் இதுபோன்ற குடோன்களில் விபத்து ஏற்பட்டால் கூட பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பதால் தான் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

ஆனால் சிறிய நிறுவனங்கள் பலவும் அனுமதியின்றி குடோன்கள் வைத்துள்ளன. இதுபோன்று அனுமதியில்லாத குடோன்கள் இருப்பதே, விபத்து காலங்களில் தான் தீயணைப்பு அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தெரியவருகிறது. இப்படி பாதுகாப்பு இல்லாமல் பல்வேறு கட்டிடங்களை குடோன்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே இதுபோன்ற குடோன்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு விதிமீறி பட்டாசுகளை பதுக்கி வைக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story